Monday, January 16, 2023

தாலாட்டின் நன்மைகள் பற்றி சில கருத்துக்கள்

Posted by K Venkatesh 7288 at 2:59 AM 0 comments
"‘தால்’ என்றால் நாக்கு. 'நாக்கை' ஆட்டிப் பாடும் பாட்டு 'தாலாட்டு'. "
'ஆரிரரோ’, ‘லுலுலாயி’... என்று வட்டாரத்துக்குத் தகுந்த படி தாலாட்டின் வார்த்தைகள் மாறலாம். ஆனால், தாய்மையின் அன்பு - பாசம் என்பது என்னமோ மாறாது தான். இந்த உலகில் 4,000 வருடங்களாகத் தாலாட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தாலாட்டு ஆனது குழந்தைகளுக்கு எண்ணற்ற விதங்களில் நன்மையை செய்கிறது. 

ஒரு சில தாலாட்டுப் பாடல்கள் குழந்தைக்கும் உறவினர்களுக்கும் இடையே ஒட்டுதலை, பாசத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும். உதாரணத்துக்கு, ‘யாரடிச்சு நீ அழுதே...’ என்ற தாலாட்டில் ஒவ்வோர் உறவின் பெயரையும் குறிப்பிட்டு, `மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே, தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ தண்டாலே, பாட்டி அடிச்சாரோ பாலூட்டும் கையாலே’ என்ற வரிகளில் உறவுகளின் மீதான பாசிட்டிவ் எண்ணம் குழந்தைகளின் பிஞ்சு மனதில் விதைக்கப்படுகிறது. அதாவது, உறவினர்கள் கோபத்தைக் கூடத் தன்னிடம் வலிக்காமல் தான் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது. 

Wednesday, October 3, 2018

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது எப்படி?

Posted by K Venkatesh 7288 at 11:27 PM 0 comments
பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது தான். பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்களே
இல்லாவிட்டாலும், பணமோ பிற சொத்துக்களோ இல்லாவிட்டாலும், தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், தன்னம்பிக்கை இருந்தால் ஒரு குழந்தை மீண்டும் அனைத்தையும் பெற்று பிழைத்துக் கொள்ளும்.
அதனால் இளவயதிலேயே குழந்தையிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்க பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும்.
எல்லா குழந்தைகளுக்கும் சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை அறிவுத்திறன் உண்டு. சராசரியான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கும், அதற்குரிய கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குமான குறைந்தபட்ச ஐ.க்யூவினை கடவுள் எல்லா குழந்தைகளுக்கும் அளித்திருக்கிறார். அதுதவிர ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதேனும் ஒன்றிரண்டு சிறப்புத் திறமையையும் அளித்திருக்கிறார். ஒரே வகுப்பில் படிக்கும் பல குழந்தைகளில் ஒரு குழந்தை ஸ்பெல்லிங் சொல்லும் போட்டியில் தேசிய அளவில் முதலாவதாக வருவது அக்குழந்தையின் சிறப்பு ஐ.க்யூவின் காரணமாகத்தான். அச்சாதனையைக் கேள்விப்படும் பெற்றோர் ‘உன் வகுப்பில் படிக்கும் பையன் என்னவெல்லாம் செய்கிறான், நீ தண்டம்’ என்று தன் குழந்தையை திட்டுவது குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்கும் சுத்தியல் அடியாகும். இதைப் போன்று தான் எல்லாப் பெற்றோர்களும் தன் குழந்தையின் வயதை ஒத்த பிற குழந்தைகளின் சாதனைகளை பேசிப் பேசி ‘நீ ஒன்றுக்கும் இலாயக்கில்லாதவன்’ என்ற முத்திரையை குழந்தையின் மனதில் குத்திவிடுகிறார்கள். பின்னால் குழந்தையே ஏதேனும் சாதிக்கலாம் என நினைத்தாலும் ‘என்னால் முடியாது, நான் எதற்கும் இலாயக்கில்லாதவன், திறமைகள் அற்றவன்’ என்ற அவநம்பிக்கை அதன் மனதில் தோன்றிவிடுகிறது. இம்மனநிலையைப் போக்கி ‘என்னாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.
குழந்தைகளிடத்தில் எதிர்மறையாகப் பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். ‘நீ இப்படித்தான் தோல்வியடைவாய் என்று எனக்கு முன்பே தெரியும்’ என்பது போன்ற பேச்சுக்களை தவிர்த்து விட்டு ‘இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்து பயிற்சி செய்தால் வெற்றி பெறுவாய்’ என்று சொல்வது நல்லது. அத்தோடு எப்படி பயிற்சி செய்ய வேண்டும், என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றெல்லாம் பெற்றோர் குழந்தைக்கு செய்து காட்டுவது மிகவும் நல்லது.
போட்டிகளில் எப்போதும் முதல் பரிசுக்கே முயற்சி செய்யாமல் மூன்றாம் பரிசுக்கு முதலில் முயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள். மூன்றாம் பரிசும் முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதையும், முழுத் தோல்வியை விட மூன்றாம் பரிசு நல்லதே என்பதையும் கூறி குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். மூன்றாம் பரிசுக்கு முயற்சி செய்த குழந்தை ஆறுதல் பரிசு தான் பெறுகிறது என்றாலும் கூட அதையும் பாராட்டுவது, அடுத்தடுத்து முயற்சிக்க குழந்தையை ஊக்கப்படுத்தும். சிறுசிறு பரிசுகளைப் பெற்ற குழந்தையின் மனம் நாளடைவில் ‘என்னாலும் பெரிய பரிசுகளைப் பெற முடியும்’ என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளும்.
தோல்விகளும் வெற்றிகளும் நிகழ்வுகளின் இருவித பரிமானங்களே என்பதை சற்று விளக்கமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ எது நடந்தாலும் செய்யும் காரியத்தை விட்டு விடக் கூடாது, தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதே ஒருவரை திறமைசாலிகளாக மாற்றும் என்பதை எடுத்துக் காட்டுகளுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட தான் தோல்வியடைந்த விசயங்களிலெல்லாம் தன் குழந்தைகளை வைத்து வெற்றியடைந்து கொள்ளும் மனப்பான்மையை பெற்றோர் விட்டுவிட வேண்டும். பெற்றோர்களின் கட்டாயங்களுக்காக ஆர்வமில்லாத விசயங்களிலெல்லாம் முயற்சித்து தோல்வியடையும் குழந்தைகளே அதிக அளவில் தன்னம்பிக்கை இல்லாமல் வளர்கின்றன. அக்குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோர்களை விட மோசமான தோல்வியாளர்களாக உருவாகின்றனர். தன்மீதான நம்பிக்கை தனக்காக செய்யும்போது தான் அதிகரிக்கும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

குழந்தையும் பொம்மையும்

Posted by K Venkatesh 7288 at 11:22 PM 0 comments

பொம்மைகள்

குழந்தைகள் எவ்வளவு அழகு. அதைவிட அதன் குறும்புகள் கொள்ளை கொள்ளும் அழகு. குழந்தைகள் விரும்பும் பொம்மைகளோ, நாம் குழந்தையை விரும்புவதற்கு ஈடாக உள்ள பொருளாக இருக்கிறது. ஆபத்தில்லாத பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால் குழந்தையும் மகிழும். நாமும் மகிழலாம். ஆனந்தத்தை அள்ளி அளிப்பவை அந்தக் குழந்தைகள்.
குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை. என்னதான் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களையோ, வெள்ளிப் பாத்திரங்களையோ குழந்தையின் கையில் கொடுத்தாலும் அவர்கள் முகம் மலர்வதென்னவோ பொம்மைகளைப் பார்த்துத்தான். பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.

முதல் மூன்று மாதங்கள்

முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு விளையாட பொம்மை எதுவும் தேவையில்லை. இந்தப் பருவத்தில் பெரிய ஸ்பாஞ்ச் பொம்மையோ பிளாஸ்டிக் முயல் பொம்மையோ உங்கள் குழந்தையின் கவனத்தைக் கவருவதில்லை. இந்தப் பருவத்தில் விரும்பும் விளையாட்டுப் பொருள் அதன் பெற்றோர்கள்தான். உங்கள் கண்கள், விரல்கள், முகம், உடைகள், இவற்றையே திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து மகிழும். தன் பிஞ்சு விரல்களால் உங்கள் முகத்தை வருடி மகிழும். இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டுவதுதான். அவ்வாறு செய்தால் குழந்தை தன் கண்களை அகல விரித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும். கிலுகிலுப்பை ஒலி கேட்டு பரவசப்படும். இந்தப் பருவத்தில் குழந்தையை பரவசப்படுத்துபவை படுக்கைக்கு அருகில் ஒட்டப்பட்ட வண்ண போஸ்டர்கள், உருண்டு செல்லக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், கிலுகிலுப்பை ஒலி, மெல்லிய இசை, தாய் பாடும் மெல்லிய தாலாட்டு.

மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை

இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு மிகவும் விரும்பி ரசித்து விளையாடும் பொருள் அதன் கை விரல்கள்தான்.
இந்தப் பருவத்தில் குழந்தை தன் கையைத் தானே திரும்பத் திரும்ப பார்க்கும். விரல்களை மூடித் திறந்து பார்க்கும். மகிழும். கையை வேகமாக அசைத்து மகிழும். சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்ளும். விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வதும் இந்தப் பருவத்தில்தான். வாயில் விரல் வைக்க ஆரம்பித்து விடும். இந்தப் பருவத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை அருகில் கூர்மையான பொருட்களையோ விழுங்கக்கூடிய பொருட்களையோ வைக்காமல் கவனமாக இருக்கவேண்டும். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்கள். பிளாஸ்டிக் ஸ்பூன், காற்றடிக்கப்பட்ட கலர் கலராக உள்ள பந்து, காற்றடித்த வண்ண பொம்மைகள்.

ஓராண்டு வரை

இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பிப்பதுடன் சுவரை, மேஜையைப் பிடித்துக் கொண்டு நின்று பழக ஆரம்பிக்கும். மேலும் இப் பருவத்தில் குழந்தைக்கு கையும், காலும் எந்நேரமும் துறுதுறுவென இருக்கும். எதைக் கொட்டுவது, எதைக் கீழே தள்ளுவது என்று நினைத்தபடி இருக்கும். இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மேஜை மேல் உள்ள பொருட்களை சிதற வைப்பதுதான்.
இந்தப் பருவத்தில் அழகாக உட்காரவும், தன்னைச் சுற்றி உள்ள பொருள்களை வேடிக்கை பார்க்கவும் பழகிக் கொள்ளும். விளையாட்டுச் சாமான்களை சேகரித்து ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு அவர்கள் கையில் கொடுத்து விட்டால் ரொம்பவும் சுவாரசியமாய் அதைக் கொட்டிக் கவிழ்ப்பது, திரும்ப எடுத்துப் போடுவது என அதிலேயே நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழும். நகரக் கூடிய சக்கரம் வைத்த பொம்மைகளை நூல்கட்டி இழுத்து விளையாடி மகிழ்வதும் இந்தப் பருவத்தில்தான். அவர்களை கவரக் கூடிய விளையாட்டுப் பொருட்கள்...
சக்கரம் பொருத்தப்பட்ட பொம்மைகள், அழுத்தினால் ஓசை தரக் கூடிய பொம்மைகள், மெத்து மெத்தென உள்ள குஷன் மெத்தைகள்.

ஒன்று முதல் இரண்டு வயது வரை

இந்தப் பருவத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல ரசனைத் தன்மை உடையவர்களாகவும், அதற்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் அமில் பிளாக், பில்டிங் பிளாக் வைத்து விளையாட விரும்புவார்கள். இவர்களுக்கு நாய் பொம்மையோ, கரடி பொம்மையோ, சந்தோஷத்தைத் தராது. சில குழந்தைகள் டி.வி. யைக் கவனித்து இசைக்கேற்ப கை தட்டி ஆடி மகிழும்.

இப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் அதே வேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித்தர வேண்டும். பொம்மைகளின் முனைகள் கூர்மையானதாக, காயப்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடாது.

Wednesday, August 29, 2018

குழந்தை உணவு

Posted by K Venkatesh 7288 at 9:51 PM 0 comments

குழந்தை உணவு:

1. 6 மாதம் வரை - தாய்ப்பால் போதும்.

2. 6 மாதம் முதல் - தக்காளி சூப், அரிசி கஞ்சி, பழரசம், ராகி கஞ்சி,சாதம் வடித்த
    கஞ்சியில் உப்புப் போட்டு கொடுக்கலாம்.வெந்த சாதம் 4 பங்கு, வேக
     வைத்த பருப்பு ஒரு பங்கு சேர்த்து குழைவாக கொடுக்கலாம்.

3. 7 மாதம் வரை - இட்லி, வேக வைத்த உருளை, வெண்ணை, சாதம், பருப்பு,
    பொங்கல், உப்புமா, தோசை, பிரட், வாழைப்பழம்.

4. 8 மாதம் முதல் - முட்டை(மஞ்சள்), ஈரல், ஆட்டுக்கால் சூப்.

5. 10 மாதத்திற்கு மேல் - வீட்டில் சாப்பிடக்கூடிய பொருள் எல்லாமே
     கொடுக்கலாம்.

6. ஆப்பிள் தோலை நீக்கி விட்டு வேக வைத்து மசித்து கொடுக்கவும்.

7. சத்து மாவு கஞ்சி, வேக வைத்த கீரை,வேக வைத்து மசித்த கேரட் கொடுக்கவும். 
   

அரிசி மாவு - உப்பு கஞ்சி தயாரிக்கும் முறை:

  1, அரிசி மாவு 2 ஸ்பூன், சிறிது உப்பு, 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க
       வைத்து ஆறியதும் கொடுக்கவும்.

குழந்தை மருத்துவம்

Posted by K Venkatesh 7288 at 9:50 PM 0 comments

வயிற்றுபூச்சி நீங்க

   1.    குழந்தைகளுக்கு வேப்பம்பூ கசாயம் கொடுத்து வர வயிற்றுப்பூச்சி
          நீங்கும்.

   2.    மூன்று வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வேப்பங்கொழுந்துடன்
            மஞ்சளை அரைத்து கொடுக்க வயிற்றுப்பூச்சி நீங்கும்.
           

சளி


   1.   துளசி இலையை நீரில் ஊற வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வர
         நினைவாற்றல் அதிகரிக்கும், சளி பிரச்சனை நீங்கும்.

மலச்சிக்கல்


  1.  குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் காய்ந்த திராட்சையை
       வெதுவெதுப்பான சுடு நீரில் ஊற வைத்து, கசக்கி  சாறை மட்டும்
       வடிகட்டி கொடுக்கவும்.

  2.  கீரைவகைகள், பீன்ஸ், வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து
       அதிகம் உள்ளது .இவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம்
       மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கலாம்.

இரும்புச்சத்து


  1.  பேரிச்சைப் பழத்தை சுடு தண்ணீயில் ஊற வைத்து விதைகளை நீக்கி
       விட்டு மிக்ஸியில் அடித்து சாறை மட்டும் வடிகட்டி கொடுக்கவும்.
       குழந்தைகள் பேரிச்சை அதிகம் சாப்பிடுவதன் மூலம் இரும்பு சத்து
        அதிகமாக கிடைக்கும்.

  2.   வெல்லம், முறுங்ககீரை, வேர்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றில்
         இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

பற்கள் வலிமை பெற

  1.  குழந்தைகளுக்கு கேரட்டை பச்சையாக சாப்பிட கொடுக்க பற்கள் வலு
        பெறும்.

குழந்தைகளின் ஆரோக்யம்

Posted by K Venkatesh 7288 at 9:46 PM 0 comments
குழந்தை பிறந்தது முதல் மூன்று ஆண்டுகள் வரை நோயிலிருந்து பாதுகாத்து எடுப்பதே பெற்றோர்களுக்கு சிரமம் ஆகிவிடுகிறது. சற்று அசாதாரணமாக கவனிக்காமல் இருந்துவிட்டால் சில சமயங்களில் விளைவுகள் விபரீதமாகவும் நடந்துவிடுகிறது.
குழந்தைகள் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு பல மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை பெற்றோர்கள் செயல்படுதல் மிக அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்குத் தரப்படும் தடுப்பூசிகளில் கவனம் கொள்வது மிகவும் அவசியம்.
 
காய்ச்சல், சளி, வயிற்றுவலி ஆகியவைகளுக்கு மருந்து கொடுப்பது போன்றே ஒவ்வொறு காலகட்டத்திலும் பலவிதமான நோய்த் தடுப்பூசிகள் குழந்தைகளுக்குத் தருதலும் பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும். குழந்தைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
 
குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.
 
குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்க, குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைப்பதோடு அவற்றை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
 
தானிய கஞ்சி
 
முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து தனித்தனியாக வறுத்து அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்க தேவையில்லை. காய்ச்சிய பாலில் இந்த தானிய மாவைக் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். வழக்கமாக தாய்ப்பாலை அடுத்து புட்டி பால் கொடுக்கும்போது இந்த உணவை துவங்கலாம்.
 
காய்கறி சாதம்
 
கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக் கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி ஆகியவற்றை ஒன்றாக குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி சாதம் குழைய வேக விடவும். வெளியில் எடுத்து சாதத்தை லேசாகக் கடைந்து நெய் சேர்த்து ஊட்டலாம்.
 
ஆப்பிள்
 
ஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு ஆவியில் அல்லது நேரடியாக தண்ணீரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் தோலை சீவி விட்டு ஆப்பிளை மசித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். தினமும் இப்படிக் கொடுப்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். விரும்பி சாப்பிடும். போதுமான சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.

Tuesday, August 28, 2018

குழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்

Posted by K Venkatesh 7288 at 11:34 PM 0 comments

குழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்

ஒவ்வொரு பெற்றோரும், தாங்கள் ஈன்றெடுத்த குழந்தைகளை 
நன்முறையில், பராமரித்து வளர்க்க வேண்டும்.  சிறந்தமுறையில்
 வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் 
பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை 
மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் 
சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை. ஆகையால், 
குழந்தைகளை பராமரிக்க வேண்டிய முறைகள் மற்றும் 
குறிப்புகள் குறித்து, இப்பதிப்பில் படித்தறிவோம்..!
1. இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. 
ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில்
 இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் 
குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் 
வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், 
மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து 
அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.
2. இரண்டு வயது வரை குழந்தைக்குக் கொஞ்சுவதும் 
சீராட்டுவதும் தேவைப்படும். இரண்டரை வயது முதல் ஆறு 
வயது வரை நல்லது கெட்டதுகளை சொல்லித்தர வேண்டும். 
பிடிவாதம் அதிகம் இருக்கும் பருவம் இது என்பதால், 
கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள்ளலாம். பொய்சொல்லும் 
போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் 
செய்யும் போதும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். 
செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் 
குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் 
தவறு இல்லை.
3. சாப்பிட மறுக்கும் குழந்தைகளைத் துரத்தி துரத்தி 
உண்ணவைப்பது மிகவும் தவறு. அவர்களின் உணவுகளை 
அவர்களுக்கு எட்டும் இடத்தில் வைத்துவிட்டு
 கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். அவர்களுக்குத்
 தேவையானதை அவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். 
வலிய போய் உணவைத் தருவது, அவர்களின் பிடிவாதக்குணத்தை 
அதிகரிக்கும். மேலும், குழந்தைகள் தங்களுக்குப் 
பிடித்தமான உணவைத் தேர்வு செய்ய ஏழு 
முதல் பத்து சந்தர்ப்பங்கள் தேவைப்படும் என்கிறது
 ஓர் ஆய்வு. எனவே, ஒரு முறை குழந்தை 
மறுத்த உணவை வற்புறுத்தித் தருவதைவிட, வேறு 
வகை உணவை அதனிடம் தரலாம். மீண்டும் சில நாட்கள் 
கழித்து அந்த உணவை வேறு வடிவிலோ ருசியிலோ 
மாற்றம் செய்து கொடுத்துப் பார்க்கலாம்.
4. ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை 
மாறுபடுகிறது. எனவே மற்ற குழந்தைகளோடு ஒப்பிட 
அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது. 
அவர்களின் பசியறிந்து ஆரோக்கியமான உணவைக் 
கொடுப்பது நல்லது.
5. மொட்டைமாடித் தோட்டத்தில் நீர்விடுவது, வீட்டைச் 
சுத்தம் செய்வது போன்ற பணிகளைக் குழந்தைகளோடு 
சேர்ந்து செய்யுங்கள். அவர்களால் செய்ய இயன்ற 
வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். 
குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபடும்போது அவர்களின்
 மனவலிமை அதிகரிக்கும்.
6. தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, 
தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை
 மூடுவது, போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக்
 கற்றுக்கொடுக்க வேண்டும்.
7. ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற அவர்களின்
 சின்னச்சின்ன வேலைகளை (Self care activity) அவர்களே 
செய்ய அனுமதியுங்கள். இது, எதிர்காலத்தில் 
அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும்
 சொந்தக்காலில் நிற்பவர்களாகவும் மாற்றும்.
 அவர்களின் ஆளுமைப் பண்பினை வளர்க்க உதவும்.
8. குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன நல்ல 
செயல்களுக்கு எளிய கிஃப்ட்களைக் கொடுத்து 
ஊக்குவியுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த 
உற்சாகம் அடைவார்கள். இதுபோலவே, அவர்கள்
 தவறு செய்யும்போது, தர வேண்டிய கிப்ட்களைத்
 தராமல் தாமதபடுத்தலாம். இது அவர்களுக்கு 
கண்டிப்பின் வலுவை உணர்த்தும்.
9. மார்க்கெட்டுக்கு அழைத்துச்சென்று காய்கறிகள் 
எங்கிருந்து வருகின்றன எனக் குழந்தைகளுக்குக் 
காட்டுங்கள். அவர்களுக்குப் பிடித்தமானக் 
காய்கறிகளை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள்.
 இதனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை
 உண்ணும் பழக்கமும் ஏற்படும். சமூகத் தொடர்பும் 
குழந்தைக்குக் கொஞ்சம் புரியும்.
10. தினமும் படிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு 
ஏற்படுத்துங்கள். நாளிதழ்களில் வரும் செய்திகளில் 
சொல்லப்பட்டிருப்பவை குறித்து அவர்கள் 
ஏதேனும் கேட்டால், எதிர்மறை எண்ணங்கள் 
தோன்றாதவாறு பாசிடிவ்வான முறையில் அதற்கு
 விளக்கங்கள் கொடுங்கள். இது சமூகத்தில் 
என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்துகொள்ள உதவும்.
 

BABIES SMILEY Template by Ipietoon Blogger Template | Gift Idea